Tuesday, 17 December 2013

கடவுள் எனும் தோழன்





              எல்லா பெண்களும் எதிர்பார்ப்பதைப் போலத் தான் நானும் பெண் குழந்தை தான் வேண்டும் என அதிகம் விரும்பினேன்.எல்லோருக்கும் இருக்கும் அதே காரணங்கள் தான் நிறைய நிறைய உடைகளை உடுத்திப் பார்க்க வேண்டும் அலங்கரித்து மகிழ வேண்டும் என எண்ணினேன்.ஆனால் பிறந்தது ஆண் குழந்தை.ஆபரேஷன் தியேட்டரில் குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் நான் டாக்டர்களிடம் கேட்டக் கேள்வி என்ன குழந்தை? உனக்கு என்ன குழந்தைம்மா வேணும் என டாக்டர் கேட்க எதுவாக இருந்தாலும் சரி டாக்டர் என்றேன்.பையன் பிறந்திருக்கான்மா என்றார்.பெண் பிள்ளை பிறக்கவில்லையே என்ற வருத்தம் மனதின் ஓரத்தில் இருக்கவே செய்தது.வீட்டில் எல்லோரும் தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஆனால் எனக்கு எப்போதும் பெண் குழந்தையின் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது .கடந்த ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை கூட என்றேனும் நினைத்து பார்த்ததுண்டு.
சிறு வயதில் அக்கா தங்கை இல்லை என்ற ஏக்கத்துடன் கழித்த நாட்கள் ஏராளம் போலவே குழந்தைப் பேறுக்குப் பின் பெண் குழந்தையின் ஏக்கம் இருந்தது.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மகனை இளவரசன் வளர்வதைப் போலவே எந்த குறையுமின்றி வளர்த்தோம்.மகன் இன்ன பொருள் வேண்டும் என கேட்பதற்கு முன்பே அவற்றை நிறைவேற்றி மகிழ்வோம்.உடைகள் ஷூக்கள் கண்ணாடிகள் வாட்ச்கள் ரிமோட் கார்கள் என் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.அப்படி மகனுக்கு உடை வாங்க சென்றாலும் என் கவனம் பெண் குழந்தைகள் செக்‌ஷனிலே இருக்கும்.அழகான பெண் குழந்தைகள் உடைகளை பார்க்கும்போதெல்லாம் என் அண்ணாவுடைய பெண் குழந்தைக்கு  என் ஆசைக்கு உடைகள் வாங்கி விடுவதுண்டு .

மகன் கே.ஜி படிக்கும் காலங்களில் எல்லாம் அவனுக்கு விளையாட்டுத் தனம் நிறைய இருந்தது.நானும் அந்த நேரத்தில் மேற்ப்படிப்பு படிக்க விரும்பியதால் அப்போது பரபரப்பாகவே நாட்கள் கழிந்தன.

ஒன்றாம் வகுப்பில் இன்னும் நல்ல பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என முடிவு செய்திருந்தோம்.எப்படியோ நினைத்த பள்ளியில் அவனுக்கு சீட் கிடைத்து சேர்த்தாயிற்று.முழுக்க முழுக்க என் வேலை அவனை கவனித்துக் கொள்வது மட்டுமாக அப்போது மாறியிருந்தது அவனும் அதிகம் என்னையே டிபென்ட் செய்திருந்தான்.தன்னிச்சையாக அவனே எதையும் செய்துக் கொள்ளமாட்டான். அதிகம் சமத்து சொல் பேச்சை அப்படியே கேட்டு நடப்பான்.என்னிடம் சொல்லாமல் எதையும் தான்றோன்றித்தனமாக செய்ததில்லை.வேலை நாட்களில் ஸ்கூல் மற்றும் கீபோர்ட் க்ளாஸ் என்றும் விடுமுறை நாட்களில் நீச்சலும் கற்றுக் கொண்டிருந்தான்.அவன் இல்லாமல் நான் எங்கேயும் இருந்ததில்லை இல்லை இல்லை நான் இல்லாமல் எங்கேயும் அவன் இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்.தாத்தா பாட்டி வீடு,தோழிகள் வீடு,கல்யாணம் ,பிறந்தநாள் விழா என எல்லா இடங்களுக்கும் நான் வரவில்லை என்றால் நானும் வரலப்பா என்றே சொல்லி விடுவான்.

நிறைய வாசிக்கும் பழக்கமும் அண்டை வீடுகளில் பள்ளி நண்பர்களுடன் நட்பும் ஏற்பட்டது.முன்பிருந்த அளவு கூச்ச சுபாவம் குறைந்து ஓரளவு எல்லோரிடமும் பழக துவங்கினான் .
நிறைய வாசிப்பு பழக்கமும் டிவியில் சிறந்த நிகழ்ச்சிகளும் பார்க்க பழக்கி விட்டிருந்தேன்.நிறைய நல்ல விஷயங்களைப் பற்றியும் நல்ல மனிதர்களைப் பற்றி நேரம் அமையும் போதெல்லாம் நண்பர்களைப் போல் பேசிக் கொண்டோம்.ஸ்பேஸ் பற்றி பேசத்துவங்கினான் எனில் நிறுத்தவே மாட்டான் எப்போதும்.விஞ்ஞானி ஆகப்போவதாக சொல்லிக்கொள்வான் எல்லோரிடமும்.

ஏதாவது அவன் தவறு செய்தால் கோபத்தில் நிறையவே திட்டிவிடுவதுண்டு சிறிது நேரத்தில் அம்மா சாரிம்மா என அழுதுக்கொண்டு வந்து கட்டிக் கொள்வான்.இன்றும் அவன் சந்தோஷமாக இருந்தால் give me a hug ,give me a kiss என கேட்டு வாங்கிக் கொள்வான்.பதிலுக்கு அம்மா நீங்க கேளுங்க நான் தரேன் என்பான்.கடந்த இரண்டாண்டுகளாக தோழனைப் போல் வளர்ந்துவிட்டான்.தந்தை,தோழன்,மகன் என எல்லாமுமாக மாறிவிட்டிருந்தான்.
இப்போதெல்லாம் இருவருக்குமான உறவு அம்மா மகன் என்பதெல்லாம் தான்டி சிறந்த நண்பர்களாகவே மாறிவிட்டிருந்தது.
நான் பெரும்பாலும் குட்டிமா,செல்லம்,தங்கம்,மம்மி,பாப்பி,சாமி என்று என்ன தோன்றுகிறதோ அந்த பெயரில் அழைப்பேன். எப்போதும் அவன் பெயர் சொல்லி அழைப்பதில்லை.பெயர் சொல்லி அழைப்பது ஏதோ எனக்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதைப் போன்ற உணர்வு எனக்கு.அவன் பேசத் துவங்கிய காலத்திலேயே அம்மாவுக்கு பெயர் இனி ராஜகுமாரி என்று செல்லப்பெயர் வைத்தான்.நான் அவனுக்கு வைத்த செல்லப்பெயர் God -கடவுள் :)

அவனுடைய அன்பும் பாசமும் அக்கறையும் புத்திசாளித்தனமும் அனுசரனையும் இன்னும் பல நல்ல குணங்களும் சேர்ந்து என் பெண்குழந்தை ஏக்கத்தை மட்டுமல்ல உடன் பிறந்த சகோதரி இல்லை என்ற ஏக்கத்தையும் சேர்த்தே போக்கியது.இத்தனை சந்தோஷங்களையும் எனக்களித்த கடவுள் எனும் தோழனுக்கு நன்றி  :)

1 comment: