Friday, 20 December 2013

பெயரில்லா உறவு !!




                                நான் விஜி ரேவதி நித்யா என நான்கு தோழிகள்  பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம் .நான்கு பேரும் ஒரே ஏரியா என்பதால் பள்ளி சென்றாலும் சரி விடுமுறை என்றாலும் சரி ஒன்றாகவே எங்கள் லேடி பர்ட் சைக்கிள் எடுத்துக்கொண்டு ஒருவர் வீட்டுக்கு மாறி மாறி சென்று பொழுதைக் கழிப்போம்.நாங்கள் அப்போது இருந்த இடம் அதிகம் கூட்டம் & வீடுகள் இல்லாத ஏரிகள் சூழ்ந்த அழகான பயம்கொள்ள வைக்காத கிராமம் என்றோ டவுன் என்றோ சொல்ல முடியாத இடம்.
பெரும்பாலும் படிப்பைத் தவிர எல்லா விதமான சேட்டைகளையும் செய்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்போம்.

எட்டாம் வகுப்பு வரை படிப்பை பற்றி பெரிதாக எந்த கவலையும் இல்லாமல் இருந்தோம் ஒன்பதாம் வகுப்பு வரவும் நான்கு பேரும் அருகில் உள்ள ஒரு டியுஷன் சென்ட்டரில் சேரலாம் என பேசிவைத்துக்கொண்டு அவரவர் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று சேர்ந்து ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த துவங்கியிருந்தோம்.

அந்த டியுஷன் சென்ட்டரில் புதிதாக லூர்த்குமார் மற்றும் ஷேக் தாவுத் என இரண்டு பையன்கள் வந்து சேர்ந்தார்கள்.இதில் லூர்த்க்கு லேசாக திக்கு வாய் என்னுடைய வீட்டு பக்கத்தில் தான் அவனுடைய வீடும் இருந்தது பேசி பழக்கம் இல்லையென்றாலும் தெரிந்திருந்தது அவனை எனக்கு.அவன் ஒல்லியான இல்லை எலும்புக்கு போர்வை போர்த்தியது போன்ற உருவம் கொண்டவன்.ஷேக் தாவுத் சற்றே எங்களை விட குள்ளமான உருவம் கருத்த கலையான முகமும் கொண்டவன்.இவர்கள் இருவரில் லூர்த் எங்கள் எல்லோரிடமும் வெகு சீக்கிரமே பேசத் துவங்கிவிட்டான்.எங்கள் நான்கு பேரிடமும் பேசுவான் போலவே ஷேக் தாவுதிடமும் பேசுவான்.ஆனால் ஷேக் எங்களை ஏறெடுத்து பார்க்காமல் திமிராக செல்வான்.சரியான ஹெட் வெய்ட் போல இவன் என நாங்கள் பேசிக்கொள்வோம்.பேசாட்டி போறான் நாமளும் பேச வேணாம் அவனுக்குதேவைன்னா பேசட்டும் என தோழிகள் பேசிக்கொண்டோம்.

நாட்கள் செல்ல செல்ல நானும் விஜியும் சேர்ந்துக்கொண்டு அவனை வம்பு செய்ய துவங்கி விட்டோம் பேனாவை பிடுங்கி வைத்துக்கொள்வது அவனுடைய ரேஞ்சர் சைக்கிளில் கற்றை பிடுங்கி விடுவது சிறு சிறு கல்லை எடுத்து அவன் மீது எரிவதென வம்பு செய்தாவது அவனை பேச வைக்க வேண்டுமென்று நினைத்தோம்.ஆனால் இப்போதும் எனக்கு நினைவில்லை அவன் எப்போது எங்களிடம் பேசத்துவங்கினான் என .நாங்கள் ஆறு பேரும் ஒரு கட்டத்தில் இணை பிரியா தோழர்களாக சுற்றித்திரிந்தோம் .என்னுடைய அம்மா சமையல் என்றால் எல்லோருக்கும் பிரியம்.பெரும்பாலும் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டு ஷட்டில் விளையாடிக்கொண்டு பேசிகொண்டிருப்போம் என் அண்ணன் அண்ணனுடைய நண்பர்களும் ஏதாவது எங்களிடம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் போதும் பரிசு பொருட்கள் வாங்குவது  கேக் வெட்டுவது வீட்டில் சாப்பிடுவதென அழகாக நாட்கள் சென்றுக்கொண்டிருந்தது.ஆண் பெண் பேதம் இன்றி இவ்வளவு அழகான நட்புகள் எல்லோருக்கும் கிடைத்திருக்குமா என தெரியவில்லை.ஆசையாக இருந்தால் டேய் அண்ணா டேய் ஷேக் குள்ளா லூர்தை டேய் திக்கு வாயா ஓமக்குச்சி என பேசி கேலி செய்துக்கொள்வோம்.இது நட்பா இல்லை அண்ணன் தங்கை உறவா என பல முறை யோசித்திருக்கிறேன்.விடை கிடைக்காத அல்லது தெரியாத ஓர் பெயரில்லாத உறவாகவே இருந்தது.

நித்யா ஒரு நாள் வந்து தன் வீட்டில் குடியிருக்கும் வீட்டில் உள்ள முத்துலட்சுமி என்ற பெண் ஷேக்கை விரும்புவதாக வந்து எங்களிடம் சொன்னாள்.காதலா என எல்லோரும் வாயைப்பிளந்தோம.வீட்டில் தெரிந்தால் எல்லோருடைய ஃப்ரென்ட்ஷிப்பும் கட்டாகிவிடும் என்றும் டியுஷன் மிஸ்க்கு காதல் கத்திரிக்காய் என ஏதாவது தெரிந்தால் எங்கள் ஃப்ரென்ட்ஷிப்பையே மோசமாக பார்ப்பார் என்றும் பயந்தோம்.நித்யா முத்துலக்ஷ்மி ஷேக் மூவருக்கும் அருகருகே வீடு.அவர்கள் எங்களை விட அதிகம் அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்பிருந்தது.

என்ன நடந்ததோ ஷேக்கும் அவளை விரும்புவதாக எங்களுக்கு தோன்றியது சரி அவனாக எங்களுக்கு சொல்லாததால் நாங்களும் பெரிதாக அதை போட்டுக் குழப்பிக்கொள்ளவில்லை.ஆனால் நாங்கள் ஆறு பேருமே அதிகம் ஒன்றாக இருப்போம் தினமும் ஒரு முறையாவது எல்லோரும் பார்த்து பேசிக்கொள்வோம்.ஒன்பதாம் வகுப்பு முடிந்து அடுத்து பத்தாம் வகுப்பு என்பதால் பெரிய சென்ட்டரில் சேரலாம்  என நினைத்தோம்.நாங்கள் நான்கு தோழிகளும் லூர்தும் அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.நாங்கள் படித்த பள்ளியில் பெரும்பாலும் பாடம் நடத்தவே மாட்டார்கள் வீட்டில் நாங்களாக படிப்பது தான் பெரும்பாலும் கைக்கொடுக்கும்.ஷேக் மட்டும் இருபாலரும் படிக்கும் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.

இருப்பினும் எல்லோரும் ஒன்றாக ட்யூஷன் சென்ட்டரில் சேருவோம் என முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசி நேரத்தில் ஷேக்கை அவன் பள்ளி நண்பர்கள் வற்புறுத்தி அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.எங்களை கண்டாலே அவர்களுக்கு எப்போது பிடிப்பதில்லை ஏனோ.நாங்கள் ஐவரும் ஒரே இடத்தில் சேர்ந்து படித்தோம் ஷேக் பக்கத்தில் உள்ள வேறு ஒரு சென்ட்டரில் சேர்ந்திருந்தான்.ஆனால் அப்படியும் தினமும் அவனும் நாங்களும் ஒன்றாகவே வீட்டுக்கு சைக்கிளை தள்ளிக் கொண்டே பேசிக் கொண்டு செல்வோம்.இப்படியே பத்தாம் வகுப்பு  சந்தோஷமாக முடிந்தது.

அடுத்து பதினோராம் வகுப்பு .இது தான் எங்களுடைய சோதனைக் காலம் ஆளுக் கொரு பள்ளி ஆளுக்கொரு க்ரூப் என பெற்றோர்கள் தலையீட்டால் தோழிகள் நான்கு பேருமே பிரிந்தோம்.பயோ க்ரூப் எடுக்க ஆசைப்பட்டதால் என்னை வேறொரு தனியார் பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர் .அதன் பின்னர் படிப்பு சுமையும் கூட எல்லோரும் பெரியவர்களாக வளர்ந்து விட்டதால் எல்லோர் வீட்டிலும் கட்டுப்பாடும் அதிகரித்து எப்போதோ ஒரு முறை மட்டுமே பார்த்துக் கொள்ள முடிந்தது.ஆனால் முன்பிருந்த அந்த பெயரில்லா உறவு உடைந்து சிதைந்து போன வலி இன்றும் எங்கோ ஓர் மூலையில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது !!!

Tuesday, 17 December 2013

கடவுள் எனும் தோழன்





              எல்லா பெண்களும் எதிர்பார்ப்பதைப் போலத் தான் நானும் பெண் குழந்தை தான் வேண்டும் என அதிகம் விரும்பினேன்.எல்லோருக்கும் இருக்கும் அதே காரணங்கள் தான் நிறைய நிறைய உடைகளை உடுத்திப் பார்க்க வேண்டும் அலங்கரித்து மகிழ வேண்டும் என எண்ணினேன்.ஆனால் பிறந்தது ஆண் குழந்தை.ஆபரேஷன் தியேட்டரில் குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் நான் டாக்டர்களிடம் கேட்டக் கேள்வி என்ன குழந்தை? உனக்கு என்ன குழந்தைம்மா வேணும் என டாக்டர் கேட்க எதுவாக இருந்தாலும் சரி டாக்டர் என்றேன்.பையன் பிறந்திருக்கான்மா என்றார்.பெண் பிள்ளை பிறக்கவில்லையே என்ற வருத்தம் மனதின் ஓரத்தில் இருக்கவே செய்தது.வீட்டில் எல்லோரும் தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஆனால் எனக்கு எப்போதும் பெண் குழந்தையின் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது .கடந்த ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை கூட என்றேனும் நினைத்து பார்த்ததுண்டு.
சிறு வயதில் அக்கா தங்கை இல்லை என்ற ஏக்கத்துடன் கழித்த நாட்கள் ஏராளம் போலவே குழந்தைப் பேறுக்குப் பின் பெண் குழந்தையின் ஏக்கம் இருந்தது.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மகனை இளவரசன் வளர்வதைப் போலவே எந்த குறையுமின்றி வளர்த்தோம்.மகன் இன்ன பொருள் வேண்டும் என கேட்பதற்கு முன்பே அவற்றை நிறைவேற்றி மகிழ்வோம்.உடைகள் ஷூக்கள் கண்ணாடிகள் வாட்ச்கள் ரிமோட் கார்கள் என் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.அப்படி மகனுக்கு உடை வாங்க சென்றாலும் என் கவனம் பெண் குழந்தைகள் செக்‌ஷனிலே இருக்கும்.அழகான பெண் குழந்தைகள் உடைகளை பார்க்கும்போதெல்லாம் என் அண்ணாவுடைய பெண் குழந்தைக்கு  என் ஆசைக்கு உடைகள் வாங்கி விடுவதுண்டு .

மகன் கே.ஜி படிக்கும் காலங்களில் எல்லாம் அவனுக்கு விளையாட்டுத் தனம் நிறைய இருந்தது.நானும் அந்த நேரத்தில் மேற்ப்படிப்பு படிக்க விரும்பியதால் அப்போது பரபரப்பாகவே நாட்கள் கழிந்தன.

ஒன்றாம் வகுப்பில் இன்னும் நல்ல பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என முடிவு செய்திருந்தோம்.எப்படியோ நினைத்த பள்ளியில் அவனுக்கு சீட் கிடைத்து சேர்த்தாயிற்று.முழுக்க முழுக்க என் வேலை அவனை கவனித்துக் கொள்வது மட்டுமாக அப்போது மாறியிருந்தது அவனும் அதிகம் என்னையே டிபென்ட் செய்திருந்தான்.தன்னிச்சையாக அவனே எதையும் செய்துக் கொள்ளமாட்டான். அதிகம் சமத்து சொல் பேச்சை அப்படியே கேட்டு நடப்பான்.என்னிடம் சொல்லாமல் எதையும் தான்றோன்றித்தனமாக செய்ததில்லை.வேலை நாட்களில் ஸ்கூல் மற்றும் கீபோர்ட் க்ளாஸ் என்றும் விடுமுறை நாட்களில் நீச்சலும் கற்றுக் கொண்டிருந்தான்.அவன் இல்லாமல் நான் எங்கேயும் இருந்ததில்லை இல்லை இல்லை நான் இல்லாமல் எங்கேயும் அவன் இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்.தாத்தா பாட்டி வீடு,தோழிகள் வீடு,கல்யாணம் ,பிறந்தநாள் விழா என எல்லா இடங்களுக்கும் நான் வரவில்லை என்றால் நானும் வரலப்பா என்றே சொல்லி விடுவான்.

நிறைய வாசிக்கும் பழக்கமும் அண்டை வீடுகளில் பள்ளி நண்பர்களுடன் நட்பும் ஏற்பட்டது.முன்பிருந்த அளவு கூச்ச சுபாவம் குறைந்து ஓரளவு எல்லோரிடமும் பழக துவங்கினான் .
நிறைய வாசிப்பு பழக்கமும் டிவியில் சிறந்த நிகழ்ச்சிகளும் பார்க்க பழக்கி விட்டிருந்தேன்.நிறைய நல்ல விஷயங்களைப் பற்றியும் நல்ல மனிதர்களைப் பற்றி நேரம் அமையும் போதெல்லாம் நண்பர்களைப் போல் பேசிக் கொண்டோம்.ஸ்பேஸ் பற்றி பேசத்துவங்கினான் எனில் நிறுத்தவே மாட்டான் எப்போதும்.விஞ்ஞானி ஆகப்போவதாக சொல்லிக்கொள்வான் எல்லோரிடமும்.

ஏதாவது அவன் தவறு செய்தால் கோபத்தில் நிறையவே திட்டிவிடுவதுண்டு சிறிது நேரத்தில் அம்மா சாரிம்மா என அழுதுக்கொண்டு வந்து கட்டிக் கொள்வான்.இன்றும் அவன் சந்தோஷமாக இருந்தால் give me a hug ,give me a kiss என கேட்டு வாங்கிக் கொள்வான்.பதிலுக்கு அம்மா நீங்க கேளுங்க நான் தரேன் என்பான்.கடந்த இரண்டாண்டுகளாக தோழனைப் போல் வளர்ந்துவிட்டான்.தந்தை,தோழன்,மகன் என எல்லாமுமாக மாறிவிட்டிருந்தான்.
இப்போதெல்லாம் இருவருக்குமான உறவு அம்மா மகன் என்பதெல்லாம் தான்டி சிறந்த நண்பர்களாகவே மாறிவிட்டிருந்தது.
நான் பெரும்பாலும் குட்டிமா,செல்லம்,தங்கம்,மம்மி,பாப்பி,சாமி என்று என்ன தோன்றுகிறதோ அந்த பெயரில் அழைப்பேன். எப்போதும் அவன் பெயர் சொல்லி அழைப்பதில்லை.பெயர் சொல்லி அழைப்பது ஏதோ எனக்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதைப் போன்ற உணர்வு எனக்கு.அவன் பேசத் துவங்கிய காலத்திலேயே அம்மாவுக்கு பெயர் இனி ராஜகுமாரி என்று செல்லப்பெயர் வைத்தான்.நான் அவனுக்கு வைத்த செல்லப்பெயர் God -கடவுள் :)

அவனுடைய அன்பும் பாசமும் அக்கறையும் புத்திசாளித்தனமும் அனுசரனையும் இன்னும் பல நல்ல குணங்களும் சேர்ந்து என் பெண்குழந்தை ஏக்கத்தை மட்டுமல்ல உடன் பிறந்த சகோதரி இல்லை என்ற ஏக்கத்தையும் சேர்த்தே போக்கியது.இத்தனை சந்தோஷங்களையும் எனக்களித்த கடவுள் எனும் தோழனுக்கு நன்றி  :)